யுத்தகாலத்தில் கிரிக்கெட்டே மனித உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான ஒரே வழியாக இருந்து: சங்கா!

11 வருடங்களின் பின்னர் பாகிஸ்தானுக்கு சென்றுள்ள ஜாம்பவான் குமார் சங்ககார, யுத்தகாலத்தில் கிரிக்கெட்டே மனித உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான ஒரே வழியாக இருந்து என கூறியுள்ளார்.

கிரிக்கெட் விதிமுறைகளை வகுக்கும் மெர்லிபோன் கிரிக்கெட் கழகம் பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ரி-20 போட்டிகள், ஒரேயொரு ஒருநாள் போட்டியில் விளையாடுகின்றது.

இதன் முதல் ரி-20 போட்டியில் இன்று லாகூர் குலான்டர்ஸ் அணியுடன் மெர்லிபோன் கிரிக்கெட் கழகம் மோதுகின்றது. இந்த நிலையில் 11 வருடங்களின் பின்னர் பாகிஸ்தானுக்கு வருகை தந்தமை குறித்தும், இப்போட்டித் தொடர் குறித்து ஜாம்பவான் குமார் சங்ககார, கருத்து தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் கூறிய கருத்துக்கள் இவை, ‘2009ஆம் ஆண்டு மார்ச் மூன்றாம் திகதி லாகூரில் இலங்கை அணியினரின் பேருந்தினை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை என்றும் மறக்க முடியாத அனுபவம். இது வாழ்க்கை மற்றும் விளையாட்டு பற்றிய மற்றொரு கோணத்தை உங்களிற்கு கற்றுத்தருகின்றது, இவ்வாறான அனுபவம் மூலம் நீங்கள் உங்கள் குணாதிசயங்கள் மற்றும் விழுமியங்கள் குறித்து அதிகம் கற்றுக்கொள்கின்றீர்கள்.

நான் அன்றைய நாளை மிகவும் தெளிவாக நினைவில் வைத்திருக்கின்றேன். அந்த நாள் நினைவுகளில் நான் வாழ்வதில்லை. அந்த நாள் என்னை மனவேதனைக்கு உட்படுத்துவதும் இல்லை.

ஆனால் இது நீங்கள் ஒருபோதும் மறக்ககூடாத ஒரு அனுபவம், அது உங்களை வலுப்படுத்துகின்றது எனக்கு இது குறித்து பேசுவதில் எந்த தயக்கமும் இல்லை. அந்த நாள் எனக்கு கவலையளிப்பதில்லைஅது என்னை வலுப்படுத்துகின்றது.

லாகூரிற்கு மீண்டும் வரமுடிந்ததை பெரும் பாக்கியமாக கருதுகின்றேன். அதேவேளை அன்றைய நாளில் தங்கள் உயிர்களை தியாகம் செய்தவர்களையும் நினைவுகொள்கின்றேன். அன்றைய நாளில் இடம்பெற்ற விடயத்தினை இலங்கை அணியின் ஒவ்வொரு வீரரும் தங்களிற்கு உரித்தான வழிமுறைகள் மூலம் கையாண்டார்கள். ஆனால் நீங்கள் நெருக்கடிகளை சந்திக்கும்போது, சவால்களை சந்திக்கும்போது நீங்கள் அதனை வெற்றிகரமாக கடந்து செல்லவேண்டும் அதுவே எங்களை ஐக்கியப்படுத்துகின்றது.

இது முன்னோக்கி நகர்வதை பற்றியது கிரிக்கெட்டின் ஒரு பகுதியாகயிருப்பதை பற்றியது. இலங்கையர்கள் என்பதால் நீங்கள் இந்த பாடத்தை சிறப்பாக கற்றுக்கொள்கின்றீர்கள் ஏனென்றால் யுத்தகாலம் முழுவதும் கிரிக்கெட்டே மனித உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான ஒரே வழியாக காணப்பட்டது.

லாகூர் தாக்குதல் சர்வதேச கிரிக்கெட் வீரர் என்பதால் நீங்கள் உண்மையான வாழ்க்கை அனுபவங்களில் இருந்தும் ஏனையவர்களின் அனுபவங்களில் இருந்தும் தப்பமுடியாது என்ற உண்மையை உணர்த்தியது. அது உண்மையில் எங்களை பலப்படுத்தும், எங்களை பணிவானவர்களாக்கும், பலவிடயங்களை அர்த்தப்படுத்தும் அனுபவமாக அமைந்தது’ என கூறினார்.

நாளை மறுதினம் அட்ச்சன் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ள ஒருநாள் போட்டியில், மெர்லிபோன் கிரிக்கெட் கழக அணி, பாகிஸ்தான் ஷாயீன்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

எதிர்வரும் 17ஆம் திகதி அட்ச்சன் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ள ரி-20 போட்டியில், நோதர்ன்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

எதிர்வரும் 19ஆம் திகதி அட்ச்சன் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ள ரி-20 போட்டியில், முல்தான் சுல்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

2009ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி மீது லாகூரில் வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் போது, பேருந்தில் பயணித்த வீரர்களில் சங்கக்காராவும் உள்ளடங்குகின்றார். அந்தச் சமயத்தில் சங்காவுக்கு சிறிய காயமும் ஏற்பட்டது.

அதன் பின்னர், இன்றுவரை சங்கக்காரா பாகிஸ்தான் சென்றதில்லை. மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்தை வழிநடத்தவுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்கார, சுமார் 11 வருடங்களின் பின்னர் அவர் பாகிஸ்தான் சென்றுள்ளார்.

அத்தோடு, மெர்லிபோன் கிரிக்கெட் கழகம், பாகிஸ்தானுக்கு சென்றுள்ளதன் மூலம் சுமார் 46 ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த கழகம் பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.

மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் நீண்டகால நோக்கத்தின் ஒரு பகுதியாக, இந்த சுற்றுப்பயணம் அமைந்துள்ளது.

இதற்கு முன்னதாகவும் மெர்லிபோர்ன் கிரிக்கெட் கழகத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக குமார் சங்கக்கார குரல் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மெர்லிபோர்ன் கிரிக்கெட் கழகத்தின் முயற்சியின் பின்னர், சர்வதேச அணிகள் பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2009ஆம் ஆண்டு லாகூர் தாக்குதலுக்கு பின்பதாக ஆறு வருடங்கள் பாகிஸ்தானுக்கு சென்று எந்தவொரு சர்வதேச அணியும் விளையாடவில்லை. பின்னர், சிம்பாப்வே அணி 2015ஆம் ஆண்டு மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளில் விளையாட முதல் தடவை பாகிஸ்தான் சென்றிருந்தது.

அதன் பின்னர் 2017இல் உலகப் பதினொருவர் அணியும், 2018 இல் மேற்கிந்திய தீவுகள் அணியும், அண்மையில் இலங்கை அணியும் அங்கு சென்று விளையாடியது.

அதுமட்டுமல்லாது, கடந்த இரண்டு வருடங்களாக பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் இறுதிப்போட்டியும் பாகிஸ்தானில் இடம்பெற்றது. இதில் பல வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்றிருந்தனர்.

தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் நீண்ட போராட்டத்திற்கு இலங்கை அணி 10 வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடியதன் மூலம் பாகிஸ்தான் மீதான அச்சப்போக்கு பெருமளவில் நீங்கியுள்ளது.

இதேவேளை, கடந்த பருவகாலத்திற்கான இங்கிலாந்தின் உள்ளூர் கவுண்டி தொடரில் சம்பியன் பட்டம் வென்ற எசெக்ஸ் கிரிக்கெட் கழகம், கிரிக்கெட் விளையாட்டின் சட்டதிட்டங்களை உருவாக்கும் மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்துடன் சம்பிரதாய கிரிக்கெட் போட்டியொன்றில் விளையாடவுள்ளது.

நான்கு நாட்கள் கொண்ட இந்த சம்பிரதாய கிரிக்கெட் போட்டி, இலங்கையின் காலி சர்வதேச மைதானத்தில் மார்ச் மாதம் 24 ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இப்போட்டியிலும் மெர்லிபோன் கிரிக்கெட் கழக அணியினை குமார் சங்கக்கார வழிநடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: சீனா கிராண்ட் பிரிக்ஸ் பந்தயம் ஒத்திவைப்பு!

Fri Feb 14 , 2020
x உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ், தீவிரமாக பரவிவரும் நிலையில், சீனாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த பர்முயுலா-1 கார்பந்தய தொடரின் நான்காவது சுற்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆண்டின் நான்காவது சுற்றான சீனா கிராண்ட் பிரிக்ஸ் பந்தயம், […]

விழாக்கள்