Home History - தடம் புரளும் தடயங்கள் இலங்கைக்கு வர முடியாமல் நீண்டகாலமாக மண்ணுக்குள் காத்திருக்கும் அற்புத சிலை!

இலங்கைக்கு வர முடியாமல் நீண்டகாலமாக மண்ணுக்குள் காத்திருக்கும் அற்புத சிலை!

84
0

நீண்டகாலமாக மாமல்லபுர மண்ணிலேயே காத்திருக்கும் ரங்கநாதர் இலங்கை சென்று பள்ளிகொண்டால்தான், யுத்த பூமியான இலங்கை அமைதிப்பூங்காவாக மாறும் என்று இந்தியா மற்றும் இலங்கையில் வாழும் ஆன்மிகவாதிகள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் இந்திய ஊடகம் ஒன்று ஆய்வுசெய்துள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

‘‘சீதையை மீட்பதற்கு உதவிய விபீஷணன், ராமரின் முடிசூட்டு விழாவைக் காண அயோத்திக்கு வந்தார்.

அப்போது, தான் பூஜித்துவந்த ரங்கநாதர் சிலையை அவருக்குக் கொடுத்தார் ராமர். இலங்கைக்கு அதை எடுத்துச்செல்லும் வழியில் காவிரி ஆற்றங்கரையில் ஓய்வெடுக்க நினைத்த விபீஷணன், ரங்கநாதர் சிலையை கீழே வைத்தார்.

மீண்டும் புறப்படும்போது தரையிலிருந்து ரங்கநாதர் சிலையை எடுக்கவே முடியவில்லை. கலங்கிப்போன விபீஷணனுக்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த தர்மசோழன் என்கிற அரசன் ஆறுதல் கூறினார்.

‘காவிரிக்கரையிலேயே தங்கியிருக்க வேண்டும் என்பதே தம் விருப்பம்’ என்று சொன்ன ரங்கநாதர், விபீஷணனைத் தேற்றுவதற்காக இலங்கையை நோக்கிப் பள்ளிகொண்டு அருள்வதாகக் கூறினார்.

அந்த இடத்தில், தர்மசோழன் கோயில் கட்டி வழிபட்டார். அந்த இடமே இன்றைய ஸ்ரீரங்கம். அதேசமயம், ரங்கநாதருக்கு இலங்கையில் கோயில் கட்டுவதற்காக மீண்டும் முயற்சிகளை மேற்கொண்ட விபீஷணன், அவை நிறைவேறா மலேயே இறந்துபோனார்.

இன்றுவரை போர் நிகழும் பூமியாகவே இலங்கை இருப்பதற்குக் காரணம், இலங்கையில் பள்ளிகொள்ள வேண்டிய ரங்கநாதர், இங்கே இருப்பதுதான்’’ என இலங்கைவாழ் ஆன்மிகவாதிகள் கூறுவதாக தெரிவிக்கப்ப்டுள்ளது.

மேலும் 1999-ம் ஆண்டு இலங்கைப் பிரதமரான சந்திரிகா குமாரதுங்க, மாமல்லபுரம் சிற்பக்கலைக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் கணபதி ஸ்தபதியிடம் இலங்கை கண்டியில் ரங்கநாதருக்கு கோயிலைக் கட்டித் தருமாறு கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பில் அவர் குறிப்பிடுகையில்,

‘‘இதற்காக ஒப்பந்தம் போடப்பட்டு முன்பணமும் கொடுத்தது இலங்கை அரசு. கணபதி ஸ்தபதியும் ஆர்வத்துடன் தன் கைப்பணத்தையெல்லாம் முதலீடு செய்து இலங்கையில் ஆலயம் எழுப்பும் பணியை ஆரம்பித்தார். 16 அடி நீளம் மற்றும் 5 அடி உயரத்தில் ஆதிசேஷன் மேல் ரங்கநாதர் துயிலும் திருக்கோல கருங்கல் சிற்பம் மாமல்லபுரம் அருகே உள்ள கணபதி ஸ்தபதியின் சிற்பக் கூடத்தில் உருவாக்கப்பட்டது.

2002-ம் ஆண்டு தேர்தலில் சந்திரிகா தோற்றார். ராஜபக்ச ஆட்சிப்பொறுப்புக்கு வந்தார். அதன் பிறகு கோயில் பணியையும் ரங்கநாதர் சிலையையும் இலங்கை அரசு கண்டுகொள்ளவில்லை.

பெருமளவில் செலவு செய்திருந்த ஸ்தபதி, மிகவும் மனவருத்தத்துக்கு ஆளானார். வேறுவழியின்றி தன்னுடைய இடத்திலேயே சிலையை மண் மூடி பாதுகாத்து வந்தார்.

2011-ம் ஆண்டில் கணபதி ஸ்தபதி காலமானார். அவருடைய விருப்பப்படி தொடங்கப்பட்ட அறக்கட்டளை, இந்தச் சிலைகுறித்து வழக்கு ஒன்றைத் தொடர்ந்தது.

2011-ம் ஆண்டில் இந்தியா வந்த ராஜபக்ச தரப்பினர், ‘மீதிப்பணத்தைக் கொடுத்து சிலையை எடுத்துக்கொள்கிறோம்’ என்று கூறிச் சென்றனர். ஆனால், அது நடைபெறவில்லை. இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.” என்று கூறியுள்ளனர்.

ஆன்மிகத்துக்கும் அமைதிக்கும் மிகப்பெரிய தொடர்பு இருக்கிறது. மாமல்லபுரத்தில் உள்ள ரங்கநாதர் சிலையை இலங்கைக்குக் கொண்டு செல்வதற்கு ஆன்மிகவாதிகளும் ஆட்சியாளர்களும் ஏற்பாடு செய்ய வேண்டும். அப்படிச் செய்தால், இலங்கை நிச்சயமாக புண்ணிய ஸ்தலம் ஆகும்.

மாமல்லபுரத்தில் உள்ள ரங்கநாதர் சிலை, இலங்கையில் உள்ள சூழல், தட்பவெப்பநிலை உள்ளிட்டவற்றுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சிலையை இலங்கைக்குக் கொண்டு சென்றால் அங்கு நிச்சயம் அமைதி நிலவும்; பிரச்னைகள் குறையும்; விவசாயம் செழிக்கும்; போர் போன்ற பதற்றமான சூழல் நீங்கி, மக்கள் அமைதியாக வாழ வழி பிறக்கும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது சிலையைப் பராமரித்துவரும் பெருந்தச்சர் அவையத்தின் தலைவர் தட்சிணாமூர்த்தி ஸ்தபதியிடம் இதுகுறித்துக் கேட்டபோது, ‘‘இது தொடர்பான வழக்கு ஒன்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ளது. எனவே, இலங்கை இந்தச் சிலையை எடுத்துக்கொள்ள வேண்டிய உதவிகளைச் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதை மட்டும் நான் சொல்லிக் கொள்கிறேன்’’ என்றார்.

‘‘இலங்கையில் பதவியேற்றுள்ள புதிய அரசு, ஆன்மிகவாதி களின் இந்த வேண்டுகோளைப் பரிசீலிக்க வேண்டும். இந்த ஆண்டிலாவது ரங்கநாதர் இலங்கையில் கோயில்கொண்டு, அங்கு அமைதி திரும்ப வேண்டும்’’ என்று விரும்பு கிறார்கள் இந்திய -இலங்கைவாழ் ஆன்மிகவாதிகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here