நிர்பயா கொலை விவகாரம்: திகார் சிறை நிர்வாகத்தின் மனுவைத் தள்ளுபடி செய்தது நீதிமன்றம்!

நிர்பயா கொலை வழக்கின் குற்றவாளிகள் நால்வரையும் தூக்கிலிடுவதற்குப் புதிய திகதிகளை அறிவிக்கக் கோரி திகார் சிறை நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

குற்றவாளிகள் நால்வரில் மூவரின் சட்ட நடவடிக்கைகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில் ஒருவரின் சீராய்வு மனு விசாரணையில் உள்ளது. இந்த சூழலில்  குற்றவாளிகளைத் தூக்கிலிடுவதற்கு புதிய திகதியை அறிவிக்குமாறு திகார் சிறை நிர்வாகம் கோரிய வழக்கின் விசாரணை இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிலையிலேயே நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.

டெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு மருத்துவ பீட மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அக்சய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகிய 4 பேருக்கு டெல்லி விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.

இதையடுத்து கடந்த ஜனவரி 22ஆம் திகதி மற்றும் பெப்ரவரி முதலாம் திகதி என இருமுறை குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்ற டெல்லி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இருமுறையும் குற்றவாளிகள் குடியரசுத் தலைவரிடம் கருணை மனுத் தாக்கல் செய்ததால் தண்டனை ஒத்திவைக்கப்பட்டது.

இதேவேளை, குற்றவாளிகளில் 3 பேருக்கு அனைத்துவிதமான சட்ட வாய்ப்புக்களும் முடிந்த நிலையில் பவன் குப்தா என்பவருக்கு மட்டும் கருணை மனுத் தாக்கல் செய்யும் வாய்ப்பு மட்டும் இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் டெல்லி உயர் நீதிமன்றம் ஒரு வாரத்துக்குள் குற்றவாளிகள் தங்களின் சட்ட வாய்ப்புகளைப் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தது. அந்த காலக்கெடு 5ஆம் திகதியோடு முடிந்துவிட்டது. இதனால் குற்றவாளிகளைத் தூக்கிலிடுவதற்கு புதிய திகதியை அறிவிக்க வேண்டும் என திகார் சிறை நிர்வாகம் கோரிய நிலையில் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஏயார் இந்தியா விவகாரம் : மத்திய அரசு மீது குற்றச்சாட்டு!

Fri Feb 7 , 2020
x ஜனாதிபதி  துணை ஜனாதிபதி  பிரதமர் ஆகிய மிக முக்கிய பிரமுகர்கள் பயன்பாட்டுக்கு தனி விமானங்கள் வழங்கப்பட்டமைக்காக மத்திய அரசிடம் இருந்து 822 கோடி ரூபாய் வரவேண்டியுள்ளதாக ஏயார் இந்தியா கூறியுள்ளது. ஏயார் இந்தியாவின் […]

விழாக்கள்