Home Britania - பிரித்தானிய செய்திகள் பிரெக்ஸிற் : ஜனவரி 31 இன் பின்னர் ஏற்படவுள்ள மாற்றங்கள்!

பிரெக்ஸிற் : ஜனவரி 31 இன் பின்னர் ஏற்படவுள்ள மாற்றங்கள்!

58
0

ஜனவரி 31, வெள்ளிக்கிழமை இரவு 11:00 மணிக்கு பிரித்தானியா முறையாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து (EU) வெளியேறுகின்றது. எனினும் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான 11 மாத நிலைமாற்ற காலம் உள்ளது.

நிலைமாற்ற காலத்தின் போது பிரித்தானியா தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றிய விதிகளின் கீழ் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பணம் செலுத்தும். பெரும்பாலான விடயங்கள் அப்படியே இருக்கும், ஆயினும் சில மாற்றங்கள் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும்.

1. பிரித்தானியாவின் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MEPs) தங்களது பதவிகளை இழக்கின்றனர் 

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தங்களது பதவிகளை இழக்கும் பிரித்தானியாவின் 73 MEP களில் நைஜல் ஃபராஜ் மற்றும் ஆன் விடெகொம்ப் போன்ற நன்கு பரிச்சயமான முகங்களும் உள்ளன.

பிரெக்ஸிற் தருணத்தில் பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து அரசியல் நிறுவனங்களையும்அமைப்புக்களையும் விட்டு வெளியேறும்.

எவ்வாறாயினும், நிலைமாற்றக் காலத்தில் ஐரோப்பிய நீதிமன்ற விதிகளை பிரித்தானியா பின்பற்றும்.

2. இனி ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடு இல்லை

எதிர்காலத்தில் ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் உச்சி மாநாட்டில் ஏனைய தலைவர்களுடன் சேர விரும்பினால் பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் சிறப்பாக அழைக்கப்படுவார்.

மீன்பிடி எல்லைகள் போன்றவற்றைத் தீர்மானிக்கும் வழக்கமான ஐரோப்பிய ஒன்றியக் கூட்டங்களில் பிரித்தானிய அமைச்சர்கள் இனி கலந்து கொள்ள மாட்டார்கள்.

3. உலக நாடுகளுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தைகள்

பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குவதற்கும் விற்பனை செய்வதற்கும் புதிய விதிகளை அமைப்பது குறித்து உலகெங்கிலும் உள்ள நாடுகளுடன் பிரித்தானியா பேச்சுக்களை ஆரம்பிக்க முடியும்.

பிரித்தானியா ஒரு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடாக இருந்தபோது அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுடன் முறையான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை நடத்த அனுமதிக்கப்படவில்லை. தனது சொந்த வர்த்தகக் கொள்கையை அமைப்பதற்கான சுதந்திரம் பிரித்தானியப் பொருளாதாரத்தை உயர்த்தும் என்று பிரெக்ஸிற் ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர்.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் விவாதிக்க நிறைய விடயங்கள் உள்ளன. பிரித்தானிய – ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வது ஒரு முதன்மை முன்னுரிமையாகும், எனவே நிலைமாற்றக் காலம் முடிவடையும் போது பொருட்கள் மற்றும் ஏனைய வர்த்தகத் தடுப்புக்களுக்கு மேலதிகக் கட்டணங்கள் தேவையில்லை.

ஏதேனும் வர்த்தக ஒப்பந்தங்கள் எட்டப்பட்டால், நிலைமாற்றக் காலம் முடியும் வரை அவற்றைத் தொடங்க முடியாது.

4. பிரித்தானியாவின் கடவுச்சீட்டு நிறம் மாறும்

30 ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்பாட்டில் உள்ள பேர்கன்டி (burgundy) நிறக் கடவுச்சீட்டு நீல நிறத்துக்கு மாறும்

2017 ஆம் ஆண்டில் மாற்றத்தை அறிவித்த அப்போதைய குடிவரவு அமைச்சர் பிரான்டன் லூவிஸ் (Brandon Lewis) 1921 ஆம் ஆண்டில் முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட நீல ​​மற்றும் தங்க வடிவமைப்பிற்கு கடவுச்சீட்டு  மாறும் என்று குறிப்பிட்டார்.

புதிய நிறம் பல மாதங்களில் படிப்படியாக வழங்கப்படும். அனைத்துப் புதிய கடவுச்சீட்டுக்களும் ஆண்டின் நடுப்பகுதியில் நீல நிறத்தில் வழங்கப்படும்.

இருப்பினும் தற்போதுள்ள பேர்கன்டி (burgundy) நிறக் கடவுச்சீட்டை தொடர்ந்து பாவிக்கமுடியும்

5. பிரெக்ஸிற் நாணயங்கள்

ஜனவரி 31 திகதியைத் தாங்கிய சுமார் மூன்று மில்லியன் நினைவு 50P பிரெக்ஸிற் நாணயங்கள், அனைத்து நாடுகளுடனும் அமைதி, செழிப்பு மற்றும் நட்பு என்ற வாசகம் பதிக்கப்பட்டு நாளை வெள்ளிக்கிழமை முதல் புழக்கத்திற்கு வரும்.

நாணயம் சிலரிடம் இருந்து எதிர்ப்பைப் பெற்றுள்ளது. சில ஐரோப்பிய ஒன்றிய ஆதரவாளர்கள் அதை ஏற்க மறுப்பதாகக் கூறியுள்ளனர்.

இதேபோன்ற ஒரு நாணயத்தை ஒக்ரோபர் 31 ஆம் திகதி அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. இருப்பினும், பிரெக்ஸிற் காலக்கெடு நீடிக்கப்பட்ட பின்னர் அந்த நாணயங்களை உருக்கி மறுசுழற்சி செய்ய வேண்டியிருந்தது.

6. பிரெக்ஸிற் திணைக்களம் மூடப்பட்டது
பிரித்தானிய -ஐரோப்பிய ஒன்றியப் பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற் பேச்சுவார்த்தைகளைக் கையாண்ட குழு பிரெக்ஸிற் நாளில் கலைக்கப்படும்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் நடவடிக்கைகளுக்காக பிரெக்ஸிற் திணைக்களம் முன்னாள் பிரதமர் தெரேசா மே யினால் 2016 இல் அமைக்கப்பட்டது.

இனி மேற்கொள்ளப்படவுள்ள பேச்சுவார்த்தைகளுக்காக இந்தக் குழு டவுனிங் ஸ்ட்ரீட் அலுவலகத்தில் இருக்கும்.

7. ஜேர்மனி தனது குடிமக்களை பிரித்தானியாவிடம் ஒப்படைக்காது

சந்தேகத்திற்குரிய சில குற்றவாளிகள் ஜேர்மனிக்குத் தப்பிச் சென்றால் அவர்களை மீண்டும் பிரித்தானியாவுக்கு அழைத்து வருவது சாத்தியமில்லை.

ஜேர்மனியின் அரசியலமைப்பு அதன் குடிமக்களை வேறொரு ஐரோப்பிய ஒன்றிய நாட்டிற்கு ஒப்படைக்க அனுமதிக்காது.

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறிய பின்னர் இந்த விதிவிலக்கு இனி பொருந்தாது என்று ஜேர்மன் மத்திய நீதி அமைச்சின் செய்தித் தொடர்பாளர் பிபிசி செய்தியிடம் தெரிவித்தார்.

இதே கட்டுப்பாடுகள் மற்றைய நாடுகளுக்கும் பொருந்துமா என்பது தெளிவாக இல்லை. உதாரணமாக, ஸ்லோவேனியா நிலைமை சிக்கலானது என்று கூறுகிறது. அதே நேரத்தில் ஐரோப்பிய ஆணையத்தால் இது குறித்துக் கருத்து தெரிவிக்க முடியவில்லை.

நிலைமாற்றக் காலத்தில் ஐரோப்பிய கைது ஆணையை தொடர்ந்து விண்ணப்பிக்கும் என்று பிரித்தானிய உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. (அதாவது ஜேர்மனி அல்லாத குடிமக்களை ஜேர்மனியால் ஒப்படைக்க முடியும்)

எவ்வாறாயினும், ஒரு நாட்டின் சட்டங்கள், குற்றவாளிகளை பிரித்தானியாவிற்கு ஒப்படைப்பதைத் தடுத்தால், அது சம்பந்தப்பட்ட நபரின் விசாரணை அல்லது தண்டனையை அந்த நாடு எடுத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here