21 வயதுக்கு குறைவானவர்கள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க முடியாது – புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு!

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு வயது 21 ஆக இருக்க வேண்டும் என்றும் அதற்கு குறைவான வயதுடையவர்கள் மாடுபிடிக்க அனுமதி இல்லை என்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் அறிவித்துள்ளார்.

மேலும் பாலமேடு, அங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு உடல் பரிசோதனை நடத்தப்படவுள்ளதாகவும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் அறிக்கையில், “அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாடுபிடி வீரர்களுக்கு நாளை 10ஆம் திகதி அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியிலும், பாலமேடு போட்டியில் பங்கேற்க விரும்புபவர்களுக்கு நாளை மறுநாள் 11ஆம் திகதி பாலமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் உடல் பரிசோதனை நடத்தப்பட்டு பெயர் பதிவு செய்யப்படும்.

மேலும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு வயது 21 ஆக இருக்க வேண்டும். அதற்கு குறைவான வயதுடையவர்கள் மாடுபிடிக்க அனுமதி இல்லை” எனக் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுரை மாவட்ட கால்நடை உதவி இயக்குநர் சுரேஷ் கிறிஸ்டோபர் கூறுகையில், ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு கால்நடைத்துறை மூலம் வழங்கப்படும் மருத்துவ சோதனை சான்றிதழ் அவசியமாகும்.

காளைகள் 120 சென்ரி மீற்றருக்கு அதிகமான உயரம் இருக்க வேண்டும். 3 முதல் 8 வயது வரை உள்ள காளைகளுக்கு மட்டுமே போட்டியில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்படும். திமில் உள்ள நாட்டினக் காளைகள் மட்டும் களத்தில் அனுமதிக்கப்படும். உடல் தகுதி சான்று பெறவரும் மாடு வளர்ப்போர் ஆதார், ரேசன் கார்ட் பிரதி, காளை புகைப்படம் ஆகியவையை கொண்டு வந்தால் பதிவு சிட்டை வழங்கப்படும்.

இதேபோல் மாடுபிடி வீரர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. உயரம், வயது, எடை, ஆரோக்கியம் குறித்து சோதனை செய்யப்பட்டு மாடுபிடி வீரர்களுக்கு போட்டியில் பங்கேற்க சான்றிதழ் வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு 18 வயதுடைய வீரர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு முதல் 21 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளமை இளைய வீரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்படும்.

குறிப்பாக மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய 3 இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப் பிரசித்தி பெற்றதாகும். இதில் ஆயிரக்கணக்கான மாடுபிடி வீரர்களும், மாடு வளர்ப்போரும் தங்கள் காளைகளுடன் பங்கேற்பார்கள்.

பொங்கல் அன்று 15ஆம் அவனியாபுரத்திலும், மறுநாள் பாலமேட்டிலும், 17 ஆம் திகதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஒக்லாந்து பகிரங்க டென்னிஸ்: கரோலின் வோஸ்னியாக்கி, ஜூலியா கோர்கஸ், செரீனா ஆகியோர் வெற்றி!

Thu Jan 9 , 2020
x நியூஸிலாந்தில் நடைபெற்றுவரும் ஒக்லாந்து பகிரங்க டென்னிஸ் தொடரில், தற்போது இரண்டாவது சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற சில போட்டிகளின் முடிவுகளை தற்போது பார்க்கலாம். இரண்டாவது சுற்றுப் போட்டியொன்றில், […]

விழாக்கள்