யாழ் நகருக்குள் இப்படி ஒரு அவலம்! மக்கள் கடும் விசனம்

யாழில் நன்னீர் குளம் ஒன்றுக்குள் மருத்துவ கழிவுகள் வீசப்பட்டு உள்ள நிலையில் அது தொடர்பில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ். பிறவுண் வீதியில் உள்ள நரிக்குண்டு குளத்துக்குள் இவ்வாறு மருத்துவ கழிவுகள் வீசப்பட்டு உள்ளன.

யாழில் தற்போது ஏற்பட்டுள்ள டெங்கு தாக்கம் காரணமாக டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் குளத்தை அண்டியுள்ள பகுதியை சேர்ந்தவர்கள், தன்னார்வாளர்கள் , இளைஞர்கள் ஆகியோர் இணைந்து நேற்று குளத்தினை சுற்றி வீசப்பட்ட கழிவு பொருட்கள் , சுற்றியுள்ள பற்றைகள் என்பவற்றை அப்புறப்படுத்தினர்.

அதன் போது மருத்துவ கழிவுகள் அடங்கிய பைகள் அவ்விடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டன. அதற்குள் பாவித்த ஊசிகள் (சிரிஞ்) மருந்து போத்தல்கள் என்பன பெருமளவில் காணப்பட்டுள்ளன.

குறித்த நன்னீர் குளத்தை அண்டிய பகுதிகளில் மருத்துவ கழிவுகள் , பாவித்த கழிவுப் பொருட்கள் உள்ளிட்ட கழிவுப் பொருட்கள் என்பவற்றை வீசி வருவதனால் குளத்தின் நீர் மாசடைகின்றது. அதனால் நிலத்தடி நீர் மாசடைந்து அருகில் உள்ள குடியிருப்பாளர்களின் வீட்டு கிணற்று நீரும் மாசடையும் ஆபத்துள்ளது.

குறித்த பகுதியில் குப்பைகளை , கழிவுப் பொருட்களை வீச வேண்டாம் என அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வந்த நிலையிலும் அதனையும் மீறி கழிவுப் பொருட்கள் வீசப்படுவதால் தற்போது அப்பகுதியில் CCTV கமரா பொருத்தப்பட்டுள்ளது.

அதனூடாக கழிவுகளை வீசுபவர்களை அடையாளம் கண்டுள்ள போதிலும் அதிகாரிகள் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுப்பதில் அசமந்தமாக செயற்படுவதாக குற்றம் சுமத்தப்படுகின்றது.

அதிகாரிகள் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தற்போது மழை காலமாக உள்ளமையால் அப்பகுதியில் வீசப்படும் கழிவுப் பொருட்களில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் தாம் கடுமையான சுகாதார பிரச்சனைகளுக்கு முகம் கொடுப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதேவேளை இந்தப்பகுதி யாழ்.மாநகரசபைக்குட்பட்டபகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சீனாவில் கைப்பேசியில் இணையத்தை பயன்படுத்துவோருக்கு புதிய சட்டம்!

Mon Dec 2 , 2019
x புதிய தொழில்நுட்பங்களை நாளுக்கு நாள் கையாண்டுவரும் சீனா, கைப்பேசியில் இணையத்தை பயன்படுத்துவோருக்கு முகத்தை ஸ்கேன் செய்யும் தொழில்நுட்பத்தை கட்டாயமாக்கவுள்ளது. நாட்டிலுள்ள மில்லியன் கணக்கான இணையதள பயனாளர்களின் அடையாளங்களை அதிகாரிகள் சரிபார்ப்பதற்கு இந்த திட்டம் […]

விழாக்கள்