£10 பில்லியன் வருடாந்த கல்வி ஊக்கத் தொகையில் மேலும் 20,000 ஆசிரியர்கள் : லிப் டெம்ஸ் உறுதி

டிசெம்பர் 12 ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றால் பாடசாலைகளுக்கு ஆண்டுக்கு £10 பில்லியன் மேலதிக நிதி ஒதுக்குவதற்கும் மேலதிகமாக 20,000 ஆசிரியர்களை நியமிப்பதற்கும் லிபரல் ஜனநாயகக் கட்சி உறுதியளித்துள்ளது.

தமது பொதுத்தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள லிபரல் ஜனநாயகக் கட்சி 2015 முதல் விதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கான நிதிக் குறைப்புகளை அடுத்த ஆண்டு £4.6 பில்லியன் அவசர ஊக்கத்தொகை மூலம் மாற்றியமைப்பதற்கு உறுதியளித்துள்ளது.

2019-20 ஆம் ஆண்டில் பாடசாலைகளுக்காக செலவிடப்பட்டதை விட 2024-25 ஆம் ஆண்டளவில் £10.6 பில்லியன் அதிகமாக செலவிடப்படும் எனவும் ஐந்து ஆண்டுகளில் ஆசிரியர் எண்ணிக்கையை 20,000 ஆல் உயர்த்த இந்த நிதி உதவும் எனவும் லிபரல் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது.

ஆசிரியர்களுக்கான ஆரம்பச் சம்பளத்தை ஆண்டுக்கு £30,000 ஆக உயர்த்துவதன் மூலமும், அனைத்து ஆசிரியர்களுக்கும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆண்டுக்கு குறைந்தது 3% ஊதிய உயர்வுக்கு உத்தரவாதம் அளிப்பதன் மூலமும் ஆசிரியர்களை ஈர்க்கவும் தக்கவைத்துக் கொள்ளவும் லிப் டெம்ஸ் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு கல்வித் தேவைகள் அல்லது குறைபாடுள்ள குழந்தைகளுக்கான ஆதரவை அதிகரிக்க மேலதிக வளங்கள் யன்படுத்தப்படும் எனவும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் பாடசாலைக் கட்டிடங்களை மேம்படுத்த £7 பில்லியன் செலவிடப்படும் எனவும் லிபரல் ஜனநாயகக் கட்சி அறிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் தங்கியிருப்பதன் மூலம் கிடைக்கப்பெறும் £50 பில்லியன் மேலதிக நிதியிலிருந்து பாடசாலைகளுக்கான £10 பில்லியன் வழங்கப்படுமென பிரெக்ஸிற் எதிர்ப்புக் கட்சியான லிபரல் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது.

தனது கட்சியின் திட்டங்களை அறிமுகப்படுத்தி பேசிய லிப் டெம்ஸ் தலைவர் ஜோ ஸ்வின்சன்;

இது எங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கான ஒரு முதலீடு. ஒவ்வொரு குழந்தைக்கும் முன்னால் இருக்கும் சவால்களை மிகச் சிறப்பாக எதிர்நோக்க உதவும் வகையில் எங்கள் பாடசாலைகள் உலகத் தரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும்.

ஆனால், அதற்குப் பதிலாக, அவர்கள் பின் தங்கியிருக்கிறார்கள். கொன்சர்வேற்றிவ் அரசாங்கம் மேற்கொண்ட நிதிக் குறைப்புகளால் மாணவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மிகவும் சிக்கலான தேவைகளைக் கொண்டவர்கள் அதிகளவில் பாதிப்பட்டுள்ளனர்.

சில பாடசாலைகள் தங்களுக்கு வேறு வழியில்லை என்று நினைப்பது அவமானகரமானது, பெற்றோரிடம் உதவியை நாடுவதும் புத்தகங்களை சமநிலைப்படுத்த வெள்ளிக்கிழமைகளில் முன்னதாகவே பாடசாலைகளை மூடுவதும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

லிபரல் ஜனநாயகக் கட்சியினர் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவார்கள். பிரெக்ஸிற்றை நிறுத்துவதன் மூலம் கிடைக்கும் மேலதிக பணத்தில் பாடசாலைகளுக்குத் தேவையான மேலதிக நிதியை நாங்கள் வழங்க முடியும்.

இதனால் மாணவர்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், வாழ்க்கையில் வெற்றிபெறத் தேவையான திறன்களுடனும் பாடசாலைகளில் இருந்து வெளியேற முடியும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பிரான்ஸில் நாய்கள் தாக்கி கர்ப்பிணி மாது உயிரிழப்பு!

Wed Nov 20 , 2019
x பிரான்ஸின் காட்டுப்பகுதியில் வைத்து கர்ப்பிணி பெண்ணொருவர் நாய்களால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிஸ் நகரில் இருந்து 90 கிலோமீற்றர் தொலைவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 29 வயதான குறித்த கர்ப்பிணிப் பெண் கடந்த […]

விழாக்கள்