ரஜினியையும் என்னையும் யாராலும் பிரிக்க முடியாது- கமல்!

சென்னை ஆழ்வார்பேட்டையில் ராஜ்கமல் நிறுவனத்தின் புதிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில் இயக்குநர் கே.பாலச்சந்தரின் சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் இணைந்து இயக்குநர் கே.பாலச்சந்தரின் மார்பளவு சிலையை திறந்து வைத்தனர். கமல் இந்த விழாவில் பேசத் தொடங்கியதும் ரஜினியை ஆர்.கே அவர்களே என்று அழைத்து தொடங்கினார். அவர் பேசியதாவது.

இந்திய திரைப்பட துறையில் ரஜினியை தாமதமாக கவுரவித்து இருந்தாலும் சரியான நபரை தான் கவுரவித்து இருக்கிறார்கள். அவர் சினிமா வாழ்க்கைக்காக எடுத்துக்கொண்ட சிரத்தை எனக்கு சற்றும் குறையாதது. எங்களது பாணி தான் வெவ்வேறு. நாங்கள் அப்போதே ஏ.வி.எம். மரத்தடியில் பேசி தெளிவாக முடிவு எடுத்தோம்.

ஒருவருக்கு ஒருவர் நட்பாகவும் மரியாதையாகவும் இருந்துகொள்ள வேண்டும் என்பது நாங்கள் பேசி முடிவெடுத்தது தான். எங்களுக்கு ரசிகர்கள் உருவாவதற்கு முன்பு எங்களது முதல் ரசிகர்கள் நாங்கள் தான். எனக்கு அவரும், அவருக்கு நானும் ரசிகர்களாக இருப்போம். என்றும் நாங்கள் தெளிவாக இருப்போம். ஹேராம் போன்ற படங்கள் ஏன் எடுக்கிறீர்கள் என்று கேட்டார்கள். நானும் ரஜினியும் பேசியதை எல்லாம் காசு வந்த பிறகு எடுக்காமல் விட்டால் தான் தவறு. நான் மட்டும் அல்ல மணிரத்தினமும் அவற்றை எடுத்து வருகிறார். முதல் படத்திலேயே மணிரத்தினத்தை பார்த்து வியந்தது உண்டு. அதே வியப்பு ரஜினிக்கும் இருந்தது தெரியும். தளபதி டைட்டிலை ரஜினி சொன்னபோது என் காதுகளுக்கு முதலில் கணபதி என்று விழுந்துவிட்டது. எனவே பிடிக்கவில்லை என்றேன்.

விநாயகருக்கான டைட்டிலாக இருக்கிறதே என்று கேட்டேன். பின்னர் தெளிவாக சொன்னதும் தான் அற்புதமான டைட்டில் என்றேன். எங்கள் ரசிகர்கள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொள்வார்கள். ஆனால் நாங்கள் தனிமையில் பேசிக்கொள்வதை கேட்டால் அவர்கள் அதிர்ச்சியடைவார்கள். ஆச்சர்யப்படுவார்கள். பாலச்சந்தர் சிலையாக இங்கே இருக்கிறார். நிலையாக என்றுமே இருப்பார். பாலச்சந்தர், அனந்து இரண்டு பேர் தொலைபேசி எண்களும் என் போனில் இருந்து அழிக்க முடியாதவை. கடந்த மாதம் கூட தனிமையாக நினைத்தபோது அனந்து சார் எண்ணுக்கு அழைத்தேன். அது அவரது வீடு என்றதும் கண்கலங்கிவிட்டேன்.

அப்போது அவர்கள் 8-ந்தேதி பிறந்தநாள் என்றார்கள். தெரியும் என்றேன். அந்த தேதியில் பாலச்சந்தருக்கு சிலை திறப்பது சிறப்பான ஒன்று. பாலச்சந்தர் சார் சிலை இங்கே வைத்ததால் அவர் என்னை கண்காணித்துக்கொண்டே இருக்கிறார் என்ற எண்ணம் எனக்குள் இருக்கும்.

ராஜ்கமல் நிறுவனத்தின் 50-வது படம் கூடிய விரைவில் அறிவிக்கப்படும். அதில் நான் நடிக்க வேண்டிய அவசியம் இல்லை. பிறரை வைத்து படங்கள் தயாரிக்கும் அளவுக்கு நீங்கள் இந்த நிறுவனத்தை வளர்த்து விட்டிருக்கிறீர்கள்.

அவ்வை சண்முகி ராஜ்கமலுக்காக ஓகே சொல்லி வைத்து இருந்த கதை. வேறு ஒரு தயாரிப்பாளர் கேட்டதும் கொடுத்தோம். தசாவதாரம் படமும் அப்படி தான். மணிரத்தினத்துக்கும் எனக்கும் எண்ண ஓட்டம் ஒன்றுதான்.

வைரமுத்துவின் முதல் பாடலை கேட்டு அவர்தான் வேண்டும் என்று அடம் பிடித்து அழைத்தவன் நான். பின்னர் அவரது புத்தகம் ஒன்றை அவருக்கே மனப்பாடமாக வாசித்து காண்பித்து அசத்தினேன்.

இவர்கள் எல்லாம் சேர்ந்து தூக்கி நிறுத்திய ராஜ்கமல் தான் இன்று நடைபோட்டுக்கொண்டு இருக்கிறது. எங்களின் பயணம் அற்புதமான பயணம். சினிமா துறையில் கோபம், அவமானம், அவமரியாதை எல்லாமும் வரும். இருந்தும் எங்களை யாராலும் பிரிக்க முடியவில்லை. முக்கியமாக நானும் ரஜினியும்.

இத்தனை ஆண்டுகளாக இணைபிரியாத நண்பர்களாக இருக்கிறோம். எங்கள் கைகளை யாராலும் பிரிக்க முடியாது. நாங்கள் சந்தித்தால் எல்லாவற்றையும் பேசிக் கொள்வோம்.

இருவருக்கும் இடையே போட்டு கொடுப்பது இதனாலேயே குறைந்துவிட்டது. இந்த நிறுவனத்தை தாங்கி பிடித்தது நிறைய பேர். ராஜ்கமலை நடத்தியவர்கள் நடத்துபவர்கள் தான் இந்த விழாவுக்கு காரணம்.

நான் பிறந்த விழாவை விட அதிகம் கொண்டாடும் விழா ராஜ்கமல் பிறந்தநாள் விழா. ரஜினி ஐகான் விருது பெறுவதற்கு போனில் வாழ்த்து சொல்லி விட்டேன். நேரிலும் சொல்லிக் கொள்கிறேன்.

அவர் திரைப்படத்துறைக்கு வந்த முதல் ஆண்டே ஐகான் ஆகிவிட்டார். சிவாஜி போல அறிமுகமான முதல் ஆண்டே ஐகான் ஆனவர் அவர். 44 ஆண்டுகள் தாமதமாக செய்து இருந்தாலும் செய்தவர்களுக்கு நன்றி.ராஜ்கமலை கவனிப்பவர்கள் தொடர்ந்து கவனியுங்கள். தொடர்ந்து இணைந்து பயணிப்போம்.

இங்கே அன்பு இருக்கிறது அது வெல்லும். நான் அலுவலகம் அமைக்க போகிறேன் என்றதும் இங்கே படம் எடுக்க போகிறேன் என்றார் பாலச்சந்தர். அவர் படப்பிடிப்புக்காக காத்திருந்து பின்னர் தான் அலுவலகம் திறந்தோம். அவர் தடம் பதித்த இடத்தில் அலுவலகம் அமைவது எனக்கு சிறப்பு. இவ்வாறு கமல் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஸ்ருதி ஹாசனின் அடுத்த அதிரடி!

Fri Nov 8 , 2019
x நடிகை ஸ்ருதி ஹாசன் சினிமாவில் முக்கிய ஹீரோக்களுடன் நடித்து வந்தவர். குழந்தை நட்சத்திரமாக சினிமா தன் அப்பா கமல்ஹாச்னுடன் அறிமுகமானவர். பாடகியாகவும் தன் திறமைகளை பயன்படுத்தி ரசிகர்களை மிகவும் கவர்ந்தவர். ஆனால் கடந்த […]

விழாக்கள்