விநாயகரின் அறுபடை வீடுகள் தெரியுமா?

அறுபடை வீடுகள்னு சொன்னாலே எல்லோரும் முருகனின் அருபடை வீடுகளைத் தான் சொல்வாங்க. தம்பி முருகனுக்கு அறுபடை வீடுகள் இருப்பது போலவே அண்ணனான விநாயகருக்கும் ஆறுபடை வீடுகள் தமிழகத்தில் உள்ளன.

முதல்படை வீடு திருவண்ணாமலையில் இருக்கிறது. திருவண்ணாமலையில் இருக்கும் விநாயகரின் பெயர் ‘அல்லல் போம் விநாயகர்’. இவரைக் குறித்துப் போற்றிப் பாடப்படும் பாடல் தான் `அல்லல் போம் வல்வினை போம் அன்னை வயிற்றில் பிறந்த தொல்லை போம்’ என்பதாகும்.

இரண்டாம் படைவீடு விருத்தாச்சலத்தில் இருக்கிறது. இங்குள்ள அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள விநாயகருக்கு `ஆழத்துப் பிள்ளையார்’ என்று பெயர். பெயருக்கேற்ப பூமியின் ஆழத்தில் சன்னிதி கொண்டுள்ளார். கீழே இறங்கிச் சென்று தான் இவரை வழிபட வேண்டும். கீழிறங்கி சென்று வழிபடப் படிக்கட்டுகள் உள்ளன. இவரைத் துதித்தால் செல்வம், கல்வி, சீரான வாழ்வு அமையும்.

மூன்றாம் படைவீடு திருக்கடவூரில் இருக்கிறது. அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்றாக இத்தலம் விளங்குகிறது. இங்குள்ள விநாயகருக்கு `கள்ள வாரணப் பிள்ளையார்’ என்று பெயர். நமக்கு நீண்ட ஆயுளை அள்ளி வழங்குபவராக விளங்குகிறார். அபிராமி பட்டர் அபிராமி அந்தாதியின் காப்புச் செய்யுளில் குறிப்பிடும் விநாயகர் இந்தக் கள்ள வாரணப் பிள்ளையார்தான். `தாமரைக் கொன்றையும் செண்பக மாலையும்’ என்று தொடங்குகிறது அப்பாடல்.

நான்காவது படைவீடு மதுரையில் இருக்கிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மீனாட்சி அம்மனை தரிசிக்கச் செல்லும் வழியில் `சித்தி விநாயகர்’ என்ற பெயரில் அருள் பாலிக்கிறார். மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது. மாணிக்கவாசகர் பாண்டிய மன்னருக்காகக் குதிரை வாங்கப் புறப்படுகையில் இந்த சித்தி விநாயகரை தரிசித்து சென்றதாகத் திருவிளையாடல் புராணம் தெரிவிக்கிறது.

ஐந்தாவது படைவீடு காசி மற்றும் பிள்ளையார்பட்டியில் இருக்கிறது. காசியில் `துண்டி ராஜ கணபதி’யாகவும், பிள்ளையார்பட்டியில் `கற்பக விநாயகர்’ ஆகவும் இருந்து அருள்பாலிக்கிறார். காசியில் இருக்கும் துண்டி ராஜ கணபதி, தீட்சா கணபதியாக இருந்து, ஞானத்தை வாரி வாரி வழங்குகிறார். காசிக்கு செல்ல முடியாதவர்களுக்கு அதே பலனைப் பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் அருளுகிறார். இவர் கையில் சிவலிங்கத்தைத் தாங்கியிருப்பது விசேஷமான அமைப்பு.

ஆறாம்படைவீடு திருநாரையூரில் இருக்கிறது. இந்த தலத்தில் `பொண்ணாப் பிள்ளையார்’ என்ற பெயரில் அருள் பாலிக்கிறார். சிற்பியின் உளியால் போள்ளப்படாமல் சுயம்புவாகத் தோன்றியவர். என்பதால் இவருக்கு இத்திருநாமம். இத்திருத்தலத்தில் தான் தேவாரத் திருமுறைகள் கிடைக்கக் காரணமாக இருந்த நம்புயாண்டார் நம்பிகளும் அவதரித்தார்.கணபதியை அவரது படை வீடுகளுக்கே சென்று தரிசித்து சிறப்பான பயன்களைப் பெறுவோமாக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அர்ஜூன மகேந்திரனை நாட்டிற்குக் கொண்டு வருவதற்கான செயற்பாடுகள் : துரிதகதியில் முன்னெடுக்கப்படும் - ஜனாதிபதி

Tue Sep 3 , 2019
x மத்திய வங்கி கொள்ளைக்கு பொறுப்பானவர்கள் இலங்கை அரசியலில் இருந்து விலக வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 68ஆவது வருடாந்த மாநாட்டில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். […]

விழாக்கள்